உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இன்று 3 ஆவது நாளாக நடவடிக்கை நீடித்து வருகிறது.
தமிழகத்தில் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் விநியோக ஆலைகள் மற்றும் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் வருவாய்த்துறை, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சட்டவிரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைதுள்ளனர். இன்று 3 ஆவது நாளாக அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று குரங்குச்சாவடி, எருமாபாளையம், நிலவாரப்பட்டி, சோழபள்ளம் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாநகர பகுதியில் முறைகேடாக செயல்பட்ட 12 குடிநீர் ஆலைகளுக்கும், மாவட்டம் முழுவதும் 30 ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சை:
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 38 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் தாலுகா வாரியாக தஞ்சையில் 13, கும்பகோணத்தில் 11, பட்டுக்கோட்டையில் 14 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் அனுமதி பெறாமல் செயல்பட்ட 16 குடிநீர் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டன. இதில் மயிலாடுதுறையில் 3 ஆலைகளுக்கும், தரங்கம்பாடியில் 2 ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.