ஈரான் நாட்டில், கொரானா பீதியால் தவித்து வரும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானில் பல்வேறு இடங்களில், இந்திய மீனவர்கள் சுமார் 450 பேர் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், இவர்களில், 300 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் தற்போது, கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவர்கள் அங்கிருந்து வெளியேற முயன்றும், பல்வேறு நாடுகளுக்கும், விமான சேவை ரத்தாகி விட்டதால், தாயகம் திரும்ப இயலாது தவித்து வருவதாகவும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கிஷ் துறைமுகம் (Port Kish), சேரூ (Cheeru) உள்ளிட்ட ஈரானின் பல்வேறு இடங்களில் உள்ள தமிழக மீனவர்கள் 300 பேரையும், பத்திரமாக மீட்டுத்தருமாறு, முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.