சட்டவிரோதமாக இயங்கும் குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குடிநீர் எடுக்க அரசு அனுமதியளிக்கக் கோரி, குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
தமிழகத்தில் இயங்கிவரும் அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் தொடர்பான வழக்கில் உரிமம் பெறாத 132 ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுளதாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூட ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் இல்லை என்றால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, கடலூர் அருகே, அனுமதி பெறாமல் இயங்கிய 13 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை குன்றத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உரிய கட்டிட அனுமதி இல்லாமல் இயங்கிவந்த 4 குடிநீர் ஆலைகளும் சீல் வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.