மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறும் தமிழக அரசு, அதேநேரம், மது குடிப்போர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு குறைந்துள்ளது என விளக்கம் அளிக்க தயாரா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
டாஸ்மாக் மதுக் கடைகள் இட மாற்றம் தொடர்பான வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கடந்த 16 ஆண்டுகளில் மட்டும், மதுபான கடைகளின் எண்ணிக்கை 35 சதவீதம் வரை குறைக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார்.
மது விலக்கை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வரும் கட்சிகள், அதன்பிறகு, இதனை கடைபிடிப்பதில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், மதுபான கடைகள் அமைக்கும் முன், அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதை ஏன் சட்டமாக்க கூடாது? என கேள்வி எழுப்பினர்.
டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என வினவிய நீதிபதிகள், டாஸ்மாக் மதுக் கடைகள் இட மாற்றம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.