தமிழகத்தின் கிராமப்புறங்களில் அரிசி சாதத்தை அதிக அளவில் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் உடல் உழைப்பு இல்லாதவர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த நீரிழிவு நோய் இப்போது கிராமப்புற மக்களையும் பதம் பார்த்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களில் வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நீரிழிவு நோயின் பாதிப்பு 4 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக உயர்ந்திருப்பதாக சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த டண்டீ பல்கலைக்கழகம் ஆகியவை தெரிவித்துள்ளன.
காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடாததும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததும் நீரிழிவு நோயின் தாக்கத்துக்கு முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகிறது.