சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், ஆவணங்கள் மாயமானது குறித்து 2018-ம் ஆண்டு அளித்த புகார் மீது இதுவரை பதிலளிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளதாக பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது தான் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக விளக்கமளித்தார்.
மேலும் ஆவணங்களை ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் கோரினார். இது குறித்து டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.