போலி ஹோமியோபதி கல்வி நிறுவனம் நடத்தி போலிச் சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் விமானப்படை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஹோமியோபதி கல்வி நிறுவனம் நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக, தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பதிவாளர் ஆவுடையப்பன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முன்னாள் விமானப்படை அதிகாரியான கனக திருமேனி என்பவர் தன்னை ஹோமியோபதி மருத்துவர் என்று கூறிக்கொண்டு கோயம்பேட்டில் கல்வி நிறுவனம் நடத்தி வந்தது தெரிய வந்தது. தனது சகோதரர் கனக ஞானகுரு மற்றும் பார்த்திபன் என்பவருடன் சேர்ந்து பாரம்பரிய மாற்று ஓமியோபதி மருத்துவம் என்ற பெயரில் ஒரு நாள் வகுப்புகள் நடத்தி பலருக்கு போலி சான்றிதழ்களை கொடுத்து வந்துள்ளனர்.
இதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் 5 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் பணம் வசூலித்துள்ளனர். இது தொடர்பாக கனக திருமேனி அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான போலிச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு போலிச் சான்றிதழ் பெற்று ஹோமியோபதி மருத்துவம் பார்ப்போரை அடையாளம் காண தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ குழுவினர் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.