சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தோல் வங்கி மூலம் இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை தானம் செய்வது போலவே தோலையும் தானம் செய்வதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.....
மனித உடலில் ரத்த நாளங்கள், இதயம், இதயத்தின் வால்வு பகுதிகள், நுரையீரல், சிறுகுடல், சிறுநீரகம், கண், தோல், எலும்பு, முதுகெலும்பு, கல்லீரல், கை என உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தானமாக அளிக்கலாம். இவற்றில், அதிக விழிப்புணர்வின்றி இருப்பது, தோல் தானம்தான்.
ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி வரிசையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழகியல் துறையில் 70 லட்சம் ரூபாய் செலவில் ‘தோல் வங்கி’ கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மூளைச்சாவு மற்றும் இயற்கை மரணம் அடைந் தவர்களிடம் இருந்து முதுகு, பின்னங்கால் மற்றும் பின்னந் தொடையில் இருந்து தோல் பெறப்பட்டு உரிய முறையில் பராமரித்து பாதுகாக்கப்படுகிறது. தீ, அமிலம், மின்சாரம், மருந்து மற்றும் ரசாயன அலர்ஜி, ஆறாத புண் போன்றவற்றால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த வங்கியிலிருந்து தோல் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை மரணம் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக் கப்பட்டவர்கள் தோல் தானம் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 53 பேரிடமிருந்து தோல் தானமாகப் பெறப்பட்டு, இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தானமாக பெறப்படும் தோலானது மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, 3 கட்டங்களாக சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தப்படும். 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 5 ஆண்டுகள் வரை தோல் பராமரிக்கப்படும். தீ போன்ற விபத்துகளால் தோல் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானமாக பெறப்பட்ட தோல் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். 15 நாட்களில் புதிய தோல் வளர்ந்த பிறகு, மேலே பொருத்தப்பட்ட தோல் தானாகவே உதிர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.
எனவே அண்மைக்காலமாக அதிகரித்து வரும் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வில் தோல் தானமும் இணையும் பட்சத்தில் பலரது வாழ்க்கையில் ஒளியேற்றப்படும் என்பதில் ஐயமில்லை.....