கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தொடங்கி வைத்தார்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை தொடங்கியது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு பஞ்சபூத ஆராதனையில் பங்கேற்றார்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய ‘டெத்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அவர், யோகக் கலைக்கு மதம், மொழி, இன வேறுபாடுகள் இல்லை என்றும் அது ஒரு அறிவியல் செயல்பாடு எனவும் குறிப்பிட்டார். மக்களை நல்வழிப்படுத்தவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும் சத்குருவைப் போன்றவர்கள் தேவைப்படுவதாகவும் புகழ்ந்துரைத்தார்.தொடர்ந்து பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், நம்முள் இருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைப்பதற்கு இந்த இரவு உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்
திரைப்படப் பின்னணிப் பாடகர்களின் பாடல்கள், லெபனான் நாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன.ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி, தேவார இசைப் பாடல், கிராமியப் பாடல்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றன.
மத்திய-மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், திரையுலகினர் திரளாகப் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.