டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து இடைத்தரகர் ஜெயக்குமார், ஊழியர் ஓம் காந்தன் ஆகியோரை மதுரை மாவட்டம் மேலூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் புறவழிச்சாலையிலுள்ள தனியார் ஹோட்டல் அருகில் விடைத்தாள்களை அரசு வாகனத்தில் இருந்து எடுத்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அழைத்து வந்து ஜெயக்குமாரிடமும், ஓம்காந்தனிடம் விசாரனை நடத்தினர்.
இதையடுத்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பொத்தன்குழிக்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து சுமார் 10 நிமிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து வாகனத்தில் ராமநாதபுரத்துக்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.