காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என கடந்த 9ஆம் தேதி, சேலம் மாவட்டம் தலைவாசலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் காவிரி டெல்டா பாசன பகுதியில் தொடர்ந்து விவசாயம் நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார். இதற்காக சட்டவல்லுநர்களோடு ஆலோசித்து தனிச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.