புதுக்கோட்டையில் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி, வாட்ஸ்அப் மூலம் தனது வலையில் விழவைத்து அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து லீலையில் ஈடுபட்ட வங்கி காசாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் வங்கி கிளையில் காசாளராகப் பணியாற்றி வருகிறான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணோடு எட்வின் ஜெயக்குமாருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்த நாள் முதலாகவே கணவனின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்ததை உணர்ந்த அந்தப் பெண், ஒருநாள் எட்வின் ஜெயக்குமாரின் செல்போனை அவனுக்குத் தெரியாமல் எடுத்துப் பார்த்துள்ளார்.
அதில் ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்களையும் அவர்களில் சிலருடன் எட்வின் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களையும் பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார்.
அதுகுறித்து கேட்டதற்கு எட்வின் ஜெயக்குமார், அவனது தாய் லில்லிஹைடா, அவனுடைய தங்கை கேத்ரின் நிர்மலா மற்றும் அவர்களது உறவுக்கார பெண் ரீட்டா உள்ளிட்டோர் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் தெரிவித்தார்.
வங்கி வாடிக்கையாளர்களாக வரும் பெண்களின் புகைப்படங்களையும் தொடர்பு எண்களையும் அவர்களது கணக்குப் புத்தகத்தில் இருந்து எடுத்து, அவர்களிடம் தந்திரமாகப் பேசும் எட்வின் ஜெயக்குமார், தனது பேச்சுக்கு மயங்கும் பெண்களை வலையில் வீழ்த்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
பின்னர் அவர்களின் வாட்சப் எண்ணுக்கு ஆபாச செய்திகளை அனுப்புவதோடு, தனியே வரவழைத்து அவர்களோடு நெருக்கமாக இருப்பதும் வாடிக்கை என்றும் கூறப்படுகிறது.
நடந்தவற்றை தனது வீட்டாரிடம் கூறியுள்ளார் அந்தப் பெண். அதனைத் தொடர்ந்து அவர்கள் வந்து எட்வின் ஜெயக்குமாரையும் அவனது குடும்பத்தாரையும் கண்டித்துவிட்டு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தன்னையும் ஆபாசமாகப் படம் எடுத்து வைத்திருப்பதாக மிரட்டத் தொடங்கிய அந்த கும்பல், தங்களைப் பற்றி போலீசில் தெரிவித்தால், இணையத்தில் அவற்றை பதிவேற்றி விடுவோம் என்றும் மிரட்டியதாகக் கூறுகிறார் பாதிக்கப்பட்ட பெண்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் எட்வின் ஜெயக்குமார் உட்பட அவனது குடும்பத்தார் 5 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே மனைவி புகார் அளித்ததை அறிந்த எட்வின் ஜெயக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றுள்ளான்.