குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் தடையை மீறி முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு காவல்துறை அனுமதியளிக்க மறுத்து விட்ட நிலையில், அதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் பேரணிக்கு தடை விதித்தது. இருப்பினும், முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட 21 அமைப்புகள் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி சென்னையில் இன்று தடையை மீறி சட்டப்பேரவையை முற்றுகையிடும் பேரணி நடைபெற்றது. கலைவாணர் அரங்கு அருகே காலை 10 மணியளவில் தொடங்கிய பேரணி இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.
விருந்தினர் மாளிகை அமைந்துள்ள வாலாஜா சாலையில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பிறகு தமிழக சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக 24 மணி நேரத்திற்குள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற நிபந்தனையுடன் பேரணியை அவர்கள் முடித்துக் கொண்டனர்.
தடையை மீறி பேரணி நடைபெற்றதால், பேரணி நடைபெற்ற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சேப்பாக்கம் பகுதியில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டதுடன், 100 சிசிடிவி கேமராக்கள் மூலமும், 5 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தும் போலீசார் கண்காணித்தனர். காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் நேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
தஞ்சை
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்ப்புப் பதாகைகளுடன் பேரணியாகச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற பேரணி மேல் வஸ்தா சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.பேரணியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதுரை
மதுரை உலக தமிழ் சங்கத்திலிருந்து காந்தி மியூசியம் வரை தடையை மீறி நடை பெற்ற பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எதிர்ப்புப் பதாகைகள் முழக்கங்களுடன் நடைபெற்ற பேரணியில் பெண்களும் கலந்துகொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சி
திருச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லை
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஈரோடு
ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வரை பேரணியாக வந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற பேரணியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியை வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து அங்கேயே எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் பங்கேற்ற 3 பெண்கள் மயக்கம் அடைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் சந்தைப் பேட்டையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் திரளானோர் கலந்துகொண்டனர். இதனை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனை முன்னிட்டு 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை
கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஸ்டேட்பாங்க் சாலை வழியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தலைமைத் தபால் நிலையம் வரை பேரணியாகச் சென்றனர். அங்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதை அடுத்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிய அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.
போராட்டத்தை முன்னிட்டு 1300 போலீசாரும், கலவர தடுப்பு பிரிவான ஆர்.ஏ.எஃப். போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். டிரோன்கள் மூலம் கண்காணிக்க போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வஜ்ரா வாகனம், தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனம் ஆகியவையும் நிறுத்தப்பட்டிருதன.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டனர். சுமார் 2 மணி நேர ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.