குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்த, சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, புதன்கிழமை சட்டப்பேரவையை முற்றுகையிட உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அறிவித்தன. இதற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், முற்றுகை போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், சட்டம் ஒழுங்கும் பாதிக்க வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை மாநகர காவல்துறை தரப்பில், சட்டப் பேரவை முற்றுகை போராட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனு காவல்துறையால் நிராகரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறிவித்துள்ள சட்டவிரோத முற்றுகை போராட்டத்திற்கு, இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து இந்த மனு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர், ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.