தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் உள்ள ஊர்களில் நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திருச்சி லால்குடி தொகுதியில் உள்ள பள்ளிவயலில் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்க அரசு ஆவண செய்யுமா என திமுக எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு பதில் நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் 2 ஆயிரத்து 424 நியாயவிலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஏழை, எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.