தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கூடுகிறது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.
சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து தனிச்சட்டம் இயற்றப்படும் என்றும், வேளாண்துறை சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்கள் மட்டுமே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அறிவிப்பை வரவேற்ற விவசாய சங்கத்தினர், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் நாளை மாலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு பற்றி கொள்கை முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இவ்வாறு கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலும், அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர முக்கிய பிரச்சனைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.