கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவம் 30 சதவீதமாகவும், தமிழகத்தில் 65 சதவீதமாகவும் உள்ளது என்றார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று அவர் பெருமிதத்தோடு தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் பிரசவத்தை கண்காணிக்க குழு ஒன்று செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக அரசின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசும் பின்பற்றி வருவதே தமிழகத்திற்கான பெருமை என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.