நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை பெற்றுள்ள திமுக, மத்திய அரசிடம் வாதிட்டு, காவிரி டெல்டா வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என முதலமைச்சர் கூறினார்.
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய அமைச்சர் தங்கமணி, முதலமைச்சர் விவசாயியாக இருந்த காரணத்தினால்தான் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் என குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், நாடாளுமன்றத்தில் திமுக அதிக எம்.பி.க்களை பெற்றுள்ள நிலையில், மத்திய அரசிடம் வாதிட்டு, வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கூறினார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், அதிமுகவை போல தாங்கள் மத்திய அரசிடம் ஒட்டி உறவாடவில்லை, எதிரும் புதிருமாக இருக்கிறோம் என்றார்.