டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, எழுதிய சில மணி நேரத்தில் மறையக்கூடிய மேஜிக் பேனாவை தயாரித்து கொடுத்த சென்னையை சேர்ந்த அசோக் என்பவனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அனைவரும், எழுதிய சில மணி நேரத்தில் எழுத்து மறையும் மேஜிக் பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுதியதும், அவர்களது விடைத்தாள்களை கைப்பற்றி இடைத்தரகர்கள் மூலம் விடைகள் திருத்தப்பட்டு மீண்டும் வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவர் தான், அந்த மேஜிக் பேனாவை தயாரித்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அசோக்கை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், ஆன்லைனில் மேஜிக் பேனாவின் விலை 300 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அசோக் மேஜிக் பேனாக்களை எங்கிருந்து வாங்கினார் அல்லது சென்னையிலேயே அவற்றை தயாரித்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப்- 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை அரசு ஊழியர்கள் 5 பேர், முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற 10 பேர், முக்கியக் குற்றவாளி ஜெயக்குமார் உள்ளிட்ட 3 இடைத்தரகர்கள், தனியார் வாகன ஓட்டுநர்கள் 5 பேர் என மொத்தமாக 22 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
அதே போல் குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் 23 பேரும், 2016ம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வு முறைகேட்டில் விஏஓக்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கமாக நிதானமாக விசாரணையை நகர்த்தும் சிபிசிஐடி போலீசார், முக்கிய குற்றவாளிகளும், ஆதாரங்களும் முதலிலேயே சிக்கிவிட்டதால் விசாரணை தொடங்கிய 24 நாட்களில் 50 பேரை கைது செய்து அரைசதமடித்துள்ளனர்.