தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகக் குற்றம்சாட்டி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்தும் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மதுரை நகரம், மதுரை சரகம் பகுதிகளுக்கும், காவல் துறை செயலாக்க ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி முருகன் ஆகியோர் திருநெல்வேலிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளுக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டம், கம்பம், போடி பகுதிகளுக்கு பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதிகளுக்கு மகேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ள டிஜிபி, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.