கரூர் அருகே தனியாக வசித்த பெண்ணை வீடு புகுந்து தாக்கி செயினை பறித்து ஓடியதாக கூறப்படும் இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து மின்கம்பத்தில் கட்டிவைத்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
கரூர் பெரியகுளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் அஷ்ரா. இவரது கணவர் அமீர்கான் சென்னையில் பணிபுரிந்து வருவதால், குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இன்று காலை 6 மணியளவில் இளைஞர் ஒருவர் அஷ்ரா வீட்டுக்குள் புகுந்து தாக்கியதாகவும், அவரது கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த சிலர் அவரை பிடிக்கமுயன்றபோது கத்தியைக் காட்டியும், மிளகாய் பொடிதூவியும் மிரட்டியுள்ளான்.
இதையடுத்து இளைஞர்கள் திரண்டு அவனை துரத்திப்பிடித்து தர்ம அடி கொடுத்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த வெங்கமேடு போலீசார், இளைஞரை படுகாயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் என்றும், இங்கு அவருக்கு நண்பர் ஒருவர் இருப்பதும் தெரியவந்தது.
ஏற்கனவே கடந்த மாதம் 26 ஆம் தேதி இதேபோல் இரு இளைஞர்கள் அஷ்ராவிடம் செயினை பறிக்கமுயன்றபோது பொதுமக்கள் திரண்டதால் தப்பியோடியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஒரே நபர்கள் கைவரிசையா அல்லது வேறு காரணமா? உள்ளூர் நண்பர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.