சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
அப்போது நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ராஜமங்களம் காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு பெண் காவலர்களும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைதொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கைதானவர்களை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சென்னையில் அண்ணாசாலை, ஆலந்தூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று, மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடந்த போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து கைதானவர்கள் விடுவிக்கப்பட்டர். இதையடுத்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டன.
இதனிடையே, வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியில் 70 வயது முதியவர் இறந்ததாக வெளியான தகவலுக்கு, சென்னை நகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இயற்கையாக மரணமடைந்தவரை சிஏஏ போராட்டத்தில் இறந்ததாக சிலர் தவறான செய்திகளை பரப்புவதாகவும் விளக்கமளித்துள்ளது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg