விபத்தில் மரணமடைவோரின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கடந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யோடு (L.i.C.) இணைந்து செயல்படுத்தப்பட உள்ள, ‘புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான’ வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை மரணங்களில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுமென்றும், விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுமென்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கான உதவித் தொகை 2 லட்சம் ரூபாய் வரை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், புதிய காப்பீட்டுத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.