ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது.
11 எம்எல்ஏக்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பதிலளித்த பின்னர் இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுப்பார் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஏ.எஸ்.போப்டே, சபாநாயகருக்கு கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்த்து தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்பட 11 அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.
இதை அடுத்து கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி அளிக்கப்பட்ட மனு மீது சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் கொறடா சக்கரபாணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நியில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.