காதல் கானா , ரூட்டு கானா , மரண கானா போன்ற கானா பாடல் வகைகளை கேட்டிருப்போம்.. கல்லூரி மாணவர்கள் பங்கேற்று அசத்திய எய்ட்ஸ் கானா போட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
காதலர் தினத்திற்கு முந்தைய நாளான பிப்ரவரி 13 , சர்வதேச ஆணுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு புதிய தகவலாகவே இருக்கலாம். இந்த தினத்தை, மாணவர்களிடையே தெரியப்படுத்தும் நோக்கில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான 'எய்ட்ஸ் கானா ' போட்டியை தன்னார்வ அமைப்பு நடத்தியது. பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்துக்களை கொண்ட கானா பாடல்களை போட்டி போட்டுக்கொண்டு பாடி அசத்தினர்.
தனிமனித ஒழுக்கம்,எய்ட்ஸ் பராவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை தங்களது கானா பாடல்களின் மூலம் பாடினர்.
இந்தியா போன்று மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளுக்கு எய்ட்ஸ் பெரும் சவாலாக உள்ளதாக கூறும் மருத்துவர் சாம், எய்ட்சை முழுமையாக ஒழிக்க வேண்டுமெனில் மாணவ பருவத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், இந்நிகழ்ச்சியின் நோக்கமும் அதுவே என்றும் விளக்கினார்.
அதேபோன்று, எச்ஐவி பரிசோதனை முகாமும் நிகழ்ச்சி திடலில் அமைக்கப்பட்டு அதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் , சில மாணவ மாணவிகளுக்கு எச்ஐவி சோதனை செய்து முடிவுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த சர்வதேச ஆணுறை தினம் போன்ற நாட்களையும் பயன்படுத்தி சமூகத்தில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் எனக்கூறும் மாணவர்கள், எச்ஐவி சோதனை செய்துக் கொள்ள தயக்கம் காண்பிக்க கூடாது என்கின்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், விழிப்புணர்வோடு இருப்போம் எய்ட்சை ஒழிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள், பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்..