ஜனவரி மாதம் வெளியிடப்படும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட இருப்பதாகவும், அதை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில், இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி மாதம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடுவது வழக்கம் என்றும், ஆனால் இந்தாண்டில் பிப்ரவரி மாதம் அது வெளியிடப்பட இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு 4 வாரங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்துக்கு பதில் தாக்கல் செய்ய 3 வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.