மருத்துவ உதவி எண் 104 அமைப்பின் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான, டெலிகாலிங் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி அடுத்த 3 நாட்கள் நடைபெற உள்ளது.
மாணவர்களின் தேர்வு நேர பிரச்சனைகளை கையாள்வது குறித்து கடந்த 6 ஆண்டுகளாக இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 104 எண் மூலம் மாணவர்கள் நிபுணர்களை தொடர்பு கொண்டு, தேர்வு தொடர்பான அச்சத்தை விளக்குவது, மன அழுத்தத்தை குறைப்பது எப்படி, தேர்வு நேரங்களில் உடல் நலனை பேணி காப்பது எப்படி போன்ற சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலந்தாய்வில் தேர்வுக்கு தயாராவது, தேர்வை எதிர்கொள்வது, தேர்வு முடிவுகளை கையாள்வது என மூன்று கட்டங்களாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.