சேலம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு, துப்புரவு பணியாளர்கள் இருவர் சிகிச்சை அளித்ததாக வீடியோ ஒன்று வெளியானதையடுத்து அவ்விருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு தலைமை மருத்துவமனையில் பத்மாவதி என்ற நிறுவனம் சார்பில், துப்புரவு மற்றும் செக்யூரிட்டி பணிகளில் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், துப்புரவு பணியாளர்கள் இருவர், அங்கு வந்த நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றி, ஊசி செலுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் மோகன்ராஜ் மற்றும் நடராஜ் ஆகிய இருவரையும் மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
துப்புரவு மற்றும் செக்யூரிட்டி பணியாளர்கள் இதுபோல சிகிச்சையளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டீன் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.