கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக, உறவினர் வீட்டிற்கு சென்ற 16 வயது சிறுமி மீது கொண்ட ஒரு தலை காதல் ஆசையால் , கணவனே, மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முறைகேடான காதலால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான பனிபிச்சை. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மேகலா என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7-வயதில் மகனும் 5-வயதில் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி மேகலா இரவு திடீர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக மேகலாவின் குடும்பத்தாருக்கு பனிப்பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த அவர்கள் வந்து விசாரிக்கையில் பனிப்பிச்சை கதறி அழுது கண்ணீர்விட்டு நடித்து அனைவரையும் நம்பவைத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாக மறுநாள் காலையிலேயே நல்லடக்கம் செய்துள்ளார்.
கேரளாவில் இருந்து வந்த மேகலாவின் அண்ணனுக்கு, பனிபிச்சை மீது சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் மேகலா இறந்ததையொட்டி கடந்த வாரம் முட்டம் தேவாலயத்தில் நினைவுத் திருப்பலி நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த பனிப்பிச்சை தனது மகனிடம் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்து, அதை தனது மனைவியின் அக்காள் மகளான 16-வயது சிறுமியிடம் கொடுக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
அந்த கடிதத்தை படித்துப் பார்த்த சிறுமியோ அதிர்ந்து போனார், அவரை "செல்லம் செல்லம்" என்று வரிக்கு வரி பிரியமாக அழைத்திருந்த பனிப்பிச்சை, சிறுமியை தான் காதலிப்பதாகவும் அவரை அடைய எண்ணியே சித்தி மேகலாவை அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், அதற்காக பாவமன்னிப்பு கேட்பதாகவும், தற்போது தான் துணை இல்லாமல் ஏங்கித் தவிப்பதாகவும் உருகி இருந்தான் பனிப்பிச்சை..!
அந்த சிறுமிக்காகவே தான் உயிரோடு இருப்பதாகவும், தனது குழந்தைகளுடன் சேர்ந்து நான்கு பேராக இனியாவது நன்றாக வாழலாம் என்றும் சிறுமியின் மனதை கெடுக்க நினைத்த பனிபிச்சை, "இனியும் சின்னப் பிள்ளையாக இருக்காதே, நம்மை கடவுள் ஆசீர்வதிப்பார் பயப்படாமல் தன்னை காதலிக்க வேண்டும், நீ எனக்கு வேணும் செல்லம்" என்றெல்லாம் கடிதத்தில் எழுதி காதல் பிச்சை கேட்டிருந்தான் பனிப்பிச்சை..!
இந்த வில்லங்கக் காதல் கடித விவகாரம் குறித்து, மேகலாவின் சகோதரர் அந்தோணியடிமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இது குறித்து குளச்சல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகாரளித்தார்.
புகாரின் பேரில் உடனடியாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
பனிப்பிச்சையை பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்த போது அவன் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தான்.
தனது மனைவியின் உடன் பிறந்த மூத்த சகோதரியின் 16-வயதான மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்கு இண்டர்நெட் இணைப்பு இல்லாத நிலையில், அவர் சித்தி மேகலா வீட்டிற்கு தினமும் வந்து வைஃஃபை உதவியுடன் ஆன்லைன் மூலம் பாடம் படித்துச் சென்றுள்ளார்.
அப்போது பனிப்பிச்சை அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தால் ஆன்லைன் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுமே என்று அஞ்சியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பனிபிச்சை தொடர்ந்து மாணவியிடம் கைவரிசை காட்டியதால், மனைவி மேகலாவிற்கு பனிபிச்சை மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.
தனது செய்கைகளுக்கு அவர் இடையூறாக இருப்பதாக எண்ணிய பனிப்பிச்சை, 16-வயது சிறுமியை அடையத் திட்டமிட்டு, மனைவி மேகலாவை அடித்து கொலை செய்ததாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.
காமுகன் பனிப்பிச்சை சிறுமிக்கு எழுதிய 4-பக்க காதல் கடிதத்தையும் அவனது வாக்குமூலத்தையும் ஆதாரமாக வைத்து கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பனிபிச்சையை கைது செய்தனர்.
சனிக்கிழமை தாசில்தார் முன்னிலையில் மேகலாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்த நிலையில் மருத்துவ மற்றும் தடயவியல் துறையினர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பனிபிச்சையை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர் .
16-க்கு ஆசைப்பட்டு கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போன 36-ஆல் அவனது இரு குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.