Polimer News
Big Story சினிமா வீடியோ

ராகவா லாரன்ஸ் சீமானுக்கு பகிரங்க சவால்…!

மக்களுக்கு அதிக சேவைகள் செய்வது யார் என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா என நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சியன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பகிரங்க சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில் தனது பேச்சுக்கு சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸை கடுமையாக விமர்சித்து சீமான் பேசிய கருத்துகள் தான் இவை. இதனால் ஆத்திரம் அடைந்த ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், அரசியலுக்காக வளரும் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன்னை கொச்சைப்படுத்துவதாகவும்
தனக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

தன்னைப் பற்றி அவர் தரக்குறைவாக பேசியதை தொடர்ந்து அவரது தொண்டர்கள் சிலர் தற்போதும் தன்னை எதிரியாக பாவித்து வருவதாகக் லாரன்ஸ் கூறியுள்ளார். தற்போது இதன் உச்சகட்டமாக தனது ஆதரவில் உள்ள மாற்றுத்திறனாளிகளையும் அந்த தலைவரின் தொண்டர்கள் சீண்டுவதாகவும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்ந்தால் சினிமாவில் ஜீரோவாக இருந்து தற்போது தான் எப்படி ஹீரோவானேனோ அதே போல் அரசியலில் ஜீரோவாக இருக்கும் தன்னை உள்ளே இழுத்து ஹீரோவாக்கி விட வேண்டாம் என லாரன்ஸ் கூறியிருந்தார். மக்களுக்கு பேசுபவர்களை விட, செயல்படுபவர்களைத் தான் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், ஏதேனும் பொது மேடையில் அமர்ந்து மக்களுக்கு யார் அதிக நன்மைகள் செய்துள்ளார்கள் என்று விவாதிக்கலாமா என்றும் லாரன்ஸ் சவால் விடுத்திருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் சமாதானமா? சவாலா? என்று அந்த தலைவர் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

லாரன்ஸ் குறிப்பிட்டுள்ள வளர்ந்து வரும் அரசியல் கட்சித்தலைவர் சீமான் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தனது செயலுக்கு சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related posts

Polimer News