Polimer News
Highlights மாவட்டம்

தாயும், மகனும் வீட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கு, பக்கத்து வீட்டு இளைஞன் கைது

திருத்தணியில் தாயும், மகனும் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பால் விற்கும் இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி அருகே பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்த வனப் பெருமாள் என்பவரின் மனைவி வீரலட்சுமி மற்றும் 10 வயது மகன் போத்திராஜ் ஆகியோர் நேற்று முன் தினம் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த வீதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது, வெங்கடேசன் என்ற பால் வியாபாரி தான் கடைசியாக அந்த வழியாகச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து வெங்கடேசனை பிடித்து போலீசார் விசாரித்தனர். பால் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்ட காரணத்தால், கடன் தொல்லை அதிகரிக்கவே கொள்ளையடிக்க திட்டமிட்டதாக வெங்கடேசன்போலீசாரிடம் கூறியுள்ளான்.

அதன்படி நன்கு பழகிய பக்கத்து வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்த வெங்கடேசன், திங்கள் கிழமை அதிகாலை வாசலில் தண்ணீர் தெளிப்பதற்காக பின்புறக் கதவை திறந்து வீரலட்சுமி தண்ணீர்
எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான்.

முகமூடி அணிந்து கொண்டு பின் புறக் கதவு வழியாக உள்ளே நுழைந்த போது சத்தம் கேட்டு வீரலட்சுமி அங்கு வரவே, நகைகளை கொடுக்குமாறு வெங்கடேசன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

தனது குரலை அறிந்து கொண்டு வீரலட்சுமி கூச்சலிட்டதாகவும் அப்போது போத்திராஜ் எழுந்து அவரது தந்தைக்கு செல்போனில் அழைப்பு விடுக்க முயற்சித்ததால் தான் கொலை செய்ய நேரிட்டதாகவும் வெங்கடேசன் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து இரும்புக் கம்பியால் தாக்கி வீரலட்சுமியையும், அயர்ன் பாக்ஸ் வயறை வைத்து கழுத்தை இறுக்கி போத்திராஜையும் கொலை செய்ததாக வெங்கடேசன் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து வெங்கடேசனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

Polimer News