Polimer News
தமிழ்நாடு முக்கிய செய்தி

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் 4 கோடியே 88 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, விஜில் செயலி மூலமாக 297 புகார்கள் வந்துள்ளதாகவும் அதனை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலுக்குப் பின்னர் 5 லட்சத்து 22 ஆயிரம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்திருப்பதாக அவர் கூறினார். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், இதுவரை  4 கோடியே 88 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளோடு திங்கட்கிழமை தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் இருந்தது பற்றி கேட்ட போது, கேரளாவுக்கு முட்டை ஏற்றிச் சென்ற பணம் என ஓட்டுநர் கூறியுள்ளார். அதற்கான உரிய ஆவணத்தை ஒப்படைத்து விட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறிய அதிகாரிகள், இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

இதே போன்று திருச்சி குடமுருட்டி பாலம் அருகே ஒரு காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது, ஆயிரத்து 8 பித்தளை செம்புகள், 500 சங்குகள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரத்தில் தனியார் பேருந்து, கார்களில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிங்கப்பூர், மலேசியா நாட்டு கரன்சிகள் உள்பட 43 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கை கடிகாரங்கள், மடிக்கணினிகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

இதேபோல் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த சிறுபாக்கத்தில், பறக்கும் படை நடத்திய சோதனையில், 5 லட்சத்து 17ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. காரனூரை சேர்ந்த பாஜக நிர்வாகியின் உறவினரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயும், விழுப்புரம் மாவட்டம் காட்டுகோட்டையை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 4 லட்சத்து 27ஆயிரத்து 350 ரூபாயையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

சீர்காழி அருகேயுள்ள சூரக்காடு பகுதியிலும் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 11 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகையை மீட்பதற்காக அந்தப் பணம் எடுத்து வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் திருப்பி வழங்கப்படவில்லை.

மதுரையில் மூன்று வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 35 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவனியாபுரத்தில் 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், திண்டுக்கல் பிரதான சாலையில் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயும், அழகர்கோயில் சாலையில் 72 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் அவனியாபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மெர்க்கண்டல் வங்கிக்கு சொந்தமானது என்று கூறப்படும் நிலையில் உரிய ஆவணங்கள் கொடுத்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

Polimer News