Polimer News
அரசியல் முக்கிய செய்தி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும்-ஆ.ராசா

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்க வேண்டும் என்று தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார். விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணையோ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணையோ கோரி தி.மு.க நீதிமன்றத்தை நாடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, கொடாநாடு பங்களாவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் மர்மம் கலந்துள்ளது என்றார். 

கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், கொள்ளை மற்றும் கொலை சம்பவம் நடந்த போது மின்சாரம் இல்லாமல் போனதற்கு யார் காரணம் என அவர் கேள்வி எழுப்பினார்.

கொட நாடு பங்களாவில் 27 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில் ஒன்று கூட வேலை செய்யாமல் போனதற்கு என்ன காரணம் என்று அவர் வினா தொடுத்தார். 

தேதி வாரியாக பார்த்தால், ஜெயலலிதா மரணத்தை அடுத்து சசிகலா சிறை செல்வதாகவும், பின்னர் முதலமைச்சர் பதவியேற்பு நடப்பதாகவும், இதைத் தொடர்ந்து சம்பவம் நடப்பதாகவும் ராசா கூறியுள்ளார். 

விசாரணை முடியும் வரையிலாவது, தான் வகிக்கும் உள்துறை இலாகாவை முதலமைச்சர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நியாயமாக விசாரணை நடக்கவில்லை என்றால், சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி நீதிமன்றம் செல்வது குறித்து திமுக ஆலோசிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Polimer News