Polimer News
மாவட்டம் வீடியோ

விறகு மண்டி உரிமையாளர் வீட்டில் 500 சவரன் நகை கொள்ளை என புகார்

மதுரை காமராஜர் புரத்தில் விறகு மண்டி உரிமையாளர் வீட்டில் 500 சவரன் நகைகளும், 8 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொள்ளைக்கான அறிகுறி இல்லை எனக் கூறி, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள காமராஜர்புரத்தில் தங்கவேலு என்பவர் வசித்து வருகிறார். விறகு மண்டி நடத்தி வரும் இவர், தமது வீட்டில் வைத்திருந்த 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் இன்று காலையில் புகார் அளித்தார்.

அதில், 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு, இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 500 சவரன் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மாயமாகியுள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது வீட்டுக்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், வீட்டில் கொள்ளை போனதற்கான அறிகுறி இல்லை என்பதை கண்டறிந்த போலீசார், தங்கவேலுவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 500 சவரன் நகைகளின் விவரம் மற்றும் 8 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களை கேட்டுள்ள போலீசார், கொள்ளையா அல்லது நாடகமா என விசாரித்து வருகின்றனர்.

Related posts

Polimer News