Polimer News
தமிழ்நாடு

முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவு..!

பழனி சிலை முறைகேட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு பயந்து முன்னாள் இணை ஆணையர் தனபால் தலைமறைவாக உள்ள நிலையில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஓய்வு பெற்ற அறநிலையத்துறையினர் பலர் ஓட்டம் பிடித்துவரும் பின்னணி.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதசுவாமி திருக்கோவிலில் மூலிகை சக்தி கொண்ட நவபாசானத்தால் செய்யப்பட்ட பழமையான மூலவர் சிலை உள்ளது. தற்போது தினமும் ஆறுகால பூஜை செய்யப்படும் இந்த நவபாசான சிலையை கடத்தி செல்லும் திட்டத்துடன் 2004 ஆம் ஆண்டு ஐம்பொன்னாலான புதிய மூலவர் சிலை ஒன்று செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் தலைமை ஸ்தபதி முத்தையா, கோவிலின் நிர்வாக அதிகாரி கே.கே.ராஜா, இணை அதிகாரி புகழேந்தி, நகை கணக்கீட்டாளர் தெய்வேந்திரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்ட்ட நிலையில் சிலை செய்யும் பணியை கண்காணித்த இணை ஆணையர் தனபால் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். மேலும் சில அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் கோரி இணை ஆணையர் தனபால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஓய்வு பெற்று வீட்டில் இருந்த அற நிலையதுறையினர் பலர் போலீசுக்கு பயந்து ஓட்டம் பிடிக்க என்ன காரணம் என்று விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு பழமையான நவபாசான சிலையை அகற்றி கடத்தும் கெட்ட நோக்கத்தில் சிலை சேதமடைந்து விட்டதாக கூறி தலைமை ஸ்தபதியான முத்தையாவின் பரிந்துரையின் பேரில் புதிய சிலை செய்ய முடிவு செய்யப்படுகிறது. அப்போதைய இந்து சமய அற நிலையத்துறை ஆணையரான ராமகிருஷ்ணன் இந்த புதிய சிலை செய்யும் பொறுப்பை பழனி கோவில் நிர்வாக அதிகாரியான கே.கே ராஜாவிடம் ஒப்படைத்துள்ளார். சிலை செய்யும் பணிகளை கண்காணிக்கவும், அதற்கு தேவையான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் இணை ஆணையர் தனபால் என்பவர் நியமிக்கப்பட்டார்

இந்த சிலையை எப்படி செய்ய வேண்டும் என்று வகுத்து கொடுக்கப்பட்ட அனைத்து விதிகளையும் ஸ்தபதி காலில் போட்டு மிதித்துள்ளார் என்கின்றனர் காவல்துறையினர்.

அதன்படி 200 கிலோ எடையில் 10 கிலோ சுத்தமான தங்கம் சேர்த்து வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் உள்ளிட்ட தூய உலோகங்கள் கலந்து புதிய சிலை செய்ய வேண்டும்..! அதற்காக மொத்தம் 263 கிலோ ஐம்பொன் உலோகங்கள் வழங்கப்பட்டுள்ளது. 200 கிலோவிற்குள் சிலையை செய்து முடிக்காமல் அதிக சேதாரத்தை கணக்கில் காட்டுவதற்காக 221 கிலோ எடையில் புதிய சிலையை செய்துள்ளார் ஸ்தபதி முத்தையா..! 4 கிலோ தங்கம் உள்பட 42 கிலோ உலோகங்கள் மீதமிருந்த நிலையில் அவற்றை இந்து சமய அற நிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை.

இந்த சிலையை செய்வதற்கு திருத்தனி கோவிலில் இருந்து 10 கிலோ தங்கம் கொடுக்கப்பட்ட நிலையில் எக்காரணம் கொண்டும் வெளி நபர்களிடம் இருந்து தங்கம் தானமாக பெற கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில்,ஸ்தபதி முத்தையா ஏராளமான செல்வந்தர்கள், வெளி நாட்டு பக்தர்களிடம் புதிய சிலை செய்வதற்கு என்று தங்கம் பெற்றுள்ளார். ஆனால் அது தொடர்பான ஆவணங்கள் அவர் பராமரிக்கவில்லை..!

சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களின் ஆய்வில் புதிய சிலையில் ஒரு பொட்டு அளவு கூட வெள்ளி இல்லை என்றும் மற்ற உலோகங்கள் கூட சரி விதத்தில் சேர்க்கபடவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

புதிய சிலையை அறை நிலையத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கோவிலில் வைத்தே செய்யாமல் ஸ்தபதி முதையாவின் ஸ்வர்னம் கலைகூடத்தில் வைத்து பழைய உலோகங்களை மட்டுமே கலந்து முறைகேடாக செய்யப்பட்டதால் புதிய சிலை சில மாதங்களிலேயே கறுத்து பயன்பாடற்று போனதாக சுட்டிக்காட்டுகின்றனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.

புதிய சிலை செய்து முடித்த பின்னர் இந்து சமய அற நிலையத்துறையிடம் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி ஆனால் சிலை செய்து முடிக்கப்பட்டது தொடர்பான, எந்த ஒரு அறிக்கையையும் அறநிலைத்துறையினரிடம் முத்தையா அளிக்கவில்லை, மீதம் உள்ள உலோகத்தையும் ஒப்படைக்கவில்லை. அறநிலையத் துறையினரும் அதனை கண்டு கொள்ளவில்லை இந்த முறைகேட்டுக்கும் மோசடிக்கும் அப்போது பொறுப்பில் இருந்த அதிகாரிகள் அனைவரும் உடந்தையாகவும், உறுதுணையாகவும் இருந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டுகின்றனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.

சிலையில் மேற்கண்ட உலோகங்கள் சரியான அளவு கலக்கப்பட்டுள்ளனவா, தங்கம், வெள்ளி போன்றவை முழுமையாக பயன்படுத்தபட்டுள்ளனவா என்பதை நகை கணக்கீட்டு அலுவலர் தெய்வேந்திரன் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்பது விதி ஆனால்
அறநிலையத்துறையினர் செல்வதற்கு முன்னதாகவே அனைத்து உலோகங்களையும் ஸ்தபதி முத்தையா உருக்கி சிலை செய்ய தொடங்கி விட்டதால் அதில் உள்ள உலோகங்கள் எந்த விகிதத்தில் கலக்கப்பட்டது என்பதை கண்காணிக்க இயலவில்லை என்று நிர்வாக அதிகாரி கே.கே. ராஜா கூறி இருக்கிறார். உலோக கலவை முறைகேட்டை தெய்வேந்திரன் மறைத்தது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால் தான் 2004ல் பழனி கோவில் பொறுப்பில் இருந்த அற நிலையத்துறை அதிகாரிகள் தலைமறைவாக ஓடி ஒழியும் சூழல் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டுகின்றனர்..!

Related posts

Polimer News