டெல்லியில் ஒருவாரமாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நீடிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் நடைபெறும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஒரு வாரமாக பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று சங்கு ஊதி போராட்டம் நடத்திய நிலையில், மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து தம்மால் முயன்றவரை உதவுவதாக உறுதியளித்தார். அ.தி.மு.க. எம்.பி.க்களும் அவர்களைச் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
மத்திய வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவரை வரவழைத்த பொன். ராதாகிருஷ்ணன், தமிழக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உறுதியளிக்கப்பட்டபோதும், கோரிக்கைகளை நிறைவேற்றி, அமைச்சர் கையெழுத்திடும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மறுத்துவிட்டனர்.
இதனிடையே, பேச்சுவார்த்தையில் தமிழக விவசாயிகள் சமாதானமடைந்துவிட்டதாகவும், அவர்களது ஒரு வார போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியை மறுத்த அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றி அமைச்சர் கையெழுத்திடும்வரை டெல்லியில் தங்கி போராட்டம் நடத்தப்போவதாக தெளிவுபடுத்தியுள்ளனர்.

3 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *