எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது!

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள், கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரது படகில் சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும் கூறி 10 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், படகுடன் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

4 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *