​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வணிகப் பயிராகச் செங்காந்தள் பயிரிட்டு வருகின்றனர்

Published : Jan 11, 2019 7:21 PM

நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வணிகப் பயிராகச் செங்காந்தள் பயிரிட்டு வருகின்றனர்

Jan 11, 2019 7:21 PM

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வணிகப் பயிராகச் செங்காந்தள் பயிரிட்டு வருகின்றனர். 

கண்வலிப்பூ, கார்த்திகைப் பூ என்கிற பெயர்களில் அழைக்கப்படும் செங்காந்தள் தமிழக அரசின் பூவாகும். செங்காந்தளின் கிழங்கு, தண்டு, பூ, விதை ஆகிய அனைத்துமே மருத்துவக் குணமிக்கவை. எட்டுத்தொகை,  பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் காந்தள் மலர் பற்றிய பாடல்கள் உள்ளன. காடுகளில் தானாகவே வளரும் செடிகளைக் கண்டறிந்து கண்வலிக் கிழங்கு, கலப்பைக் கிழங்கு என்றழைக்கப்படும் கிழங்கைத் தோண்டி மருந்துக்கு விற்கும் வணிகம் ஏற்கெனவே உள்ளது. தமிழகத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திலும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்திலும் மட்டுமே விவசாயிகள் அதிக அளவில் செங்காந்தள் பயிரிடுகின்றனர். அரவக்குறிச்சி வட்டத்தில் மொண்ணூத்துப்பட்டி, தண்ணீர்ப் பந்தல், இனுங்கனூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட ஊர்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் செங்காந்தள் பயிரிடும் விவசாயிகள் இதன் விதைகளைக் கிலோ இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை விற்று வருகின்றனர்.

image 

நாலடி அகலங்கொண்ட பார்கள் அமைத்து, அவற்றின் மீது இரும்புக் கம்பி, மூங்கில் குச்சி ஆகியவற்றைக் கொண்டு பந்தல் அமைத்துள்ளனர். ஆடி மாதத்தில் பார்களில் கண்வலிக்கிழங்குகளை ஊன்றுகின்றனர். 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் செங்காந்தள் பூக்கின்றது. கொடிபோன்று பந்தலில் பற்றிப்படரும் செடியில் பல கிளைகள் பிரிந்து அவற்றில் பூக்கள் பூக்கின்றன. சிவப்பு மஞ்சள் ஆகிய வண்ணங்களில் இருக்கும் செங்காந்தள் பூ பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பூக்கள் காய்ந்தவுடன் காய்கள் காய்க்கின்றன. காய்கள் முற்றியவுடன் உள்ளே மிளகு அளவுக்கு விதைகள் இருக்கும். காய்கள் வெடிப்பதற்கு முன் பறித்து விதைகளைப் பக்குவமாகக் காயவைத்து அவற்றை விற்பனை செய்கின்றனர். 

image

மார்கழி மாதத்தில் தொடங்கும் அறுவடை மாசி பங்குனி வரை நீடிக்கிறது. அதன்பின் அடுத்த ஆடி மாதம் வரை கண்வலிக் கிழங்கில் இருந்து செடிகள் முளைக்காமல் பார்த்துக்கொள்கின்றனர். மீண்டும் அடுத்த ஆடி மாதம் கிழங்கில் இருந்து செடி வளர்ந்து மீண்டும் பயன்கொடுக்கிறது. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் மிகக்குறைவாகவே தேவைப்படுகிறது. ஒரு முறை கிழங்கை ஊன்றினால் 5 முதல் 6 ஆண்டுகள் வரை அந்தக் கிழங்கிலிருந்து செடிகள் வளர்ந்து பயன்தரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

image

செங்காந்தள் காய்களைப் பக்குவமாகப் பறித்து விதைகளைச் சேகரித்தால் ஏக்கருக்கு 200 கிலோ விதைகள் கிடைக்கும். இந்த விதைகள் கிலோ 2 இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை இடைத்தரகர்களால் விலைக்கு வாங்கப்படுகிறது. அவர்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்குக் கிலோ இருபதாயிரம் ரூபாய் வரை விற்பதாகக் கூறப்படுகிறது. மருந்து தயாரிப்பதற்காக இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் செங்காந்தள் விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விவசாயிகளுக்கு முழுப் பயனும் கிடைக்கும் வகையில் செங்காந்தள் விதைகளை அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறைந்த செலவில் குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி ஆறாண்டுகள் வரை பயன்தரும் செங்காந்தளைத் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளும் பயிரிட்டு அதிக இலாபம் பெறலாம்.